Archives: நவம்பர் 2020

நீதியான காணிக்கை

வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால்  அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .

இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு  தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால்  அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும்  அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.

சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.

திரும்பும் இனிமை

ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.

ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).

ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.

சுவாசமும் அதின் சுருக்கமும்

மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.

எல்லா தேவ பிள்ளைகளுக்கும்  இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.

எதிர்கொள்ளும் சவால்கள்

சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து  பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.

தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று  இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்"(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.

“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு  சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார். 

நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.